காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம்- கமல்ஹாசனுக்கு திருமாவளவன் பாராட்டு

துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம்- கமல்ஹாசனுக்கு திருமாவளவன் பாராட்டு
Published on

சென்னை:

2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசனின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.

நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.

அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.

அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!

மாண்புநிறை அண்ணனுக்கு

மனம்நிறைந்த பாராட்டுகள்! என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com