

நடைபெறவுள்ள 2026 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை எனவும், மாறாக திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என திடீரென நேற்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்த திடீர் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றேக் கூறலாம். திமுக தரப்பில் மநீம-வுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதும், மேலும் அவர்களை திமுகவின் "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடக் கோரியதுமே இதற்கு காரணம் என சூசகமாக தெரிவித்தார் கமல்ஹாசன். மநீம இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளது திமுக.
ஆனால் திமுகவின் இந்த நடவடிக்கை கூட்டணி தலைவர்கள் பலரிடையே ஒருவித மனக்கசப்பை ஏற்படுத்தியதாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாயினும், அவர்களை டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்வது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல.
அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது கமல்ஹாசனும் தங்கள் (மு.க.ஸ்டாலின்) தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட கமல்ஹாசனை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.
தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.