

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு 457 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் சிறப்பாக ஆடிய மந்தனா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்கள் எடுத்தார்.
தீப்தி ஷர்மா 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லாரன் பைலர், ஈசி வோங் மற்றும் மேடி வில்லியர்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து, தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 115 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடர்ந்தது.
இன்று நடந்த ஆட்டத்தில் தொடக்க ஜோடியான ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா 88 ரன்கள் சேர்த்தனர். ஷெபாலி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, மந்தனா, யாஸ்திகா பாட்டியாவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து அணியை ஒரு வலுவான ஸ்கோரை எட்டச் செய்தார்.
மந்தனா 10 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் யாஸ்திகா 14 பவுண்டரிகளுடன் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் பெண் பேட்டர் என்ற பெருமையையும் யாஸ்திகா பெற்றார்.
ரிச்சா கோஷும் 8 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது.
இங்கிலாந்து சார்பில், சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளையும், லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு 457 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை நிர்ணயித்தது.
நேற்று டி20 சர்வதேச தொடர் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இறுதிப்போட்டியில் தோற்று இந்திய ஆண்கள் அணி சொதப்பிய நிலையில் மகளிர் அணியின் அபார ஆட்டம் வரவேற்பை பெற்று வருகிறது.