

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்குப் பிறகும் ரோகித் சர்மா இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. தகவல்.
இந்த தகவலின் மூலம், இந்திய அணியில் ரோகித் சர்மா எதிர்காலம் குறித்த ஊகங்களை பி.சி.சி.ஐ. முற்றிலுமாக நிராகரித்தது.
வருகிற ஜூலை 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டி ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்று பரவலாக ஊகங்கள் நிலவி வந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா அந்த கருத்துக்களை மறுத்தார்.
மறுப்பு:
இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துடனான உரையாடலில் பேசிய அவர், "ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல ஊகங்கள் பரவி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் தனது கடைசி போட்டியில் விளையாடுவார் என்பது போன்ற எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன்.
ரோகித் இந்திய ஒருநாள் அணியின் வழக்கமான உறுப்பினர்; அணியின் திட்டமிடலில் அவர் இடம்பெறும் வரை தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்காது," என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பை:
2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவித்து இருந்தாலும், இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவரது குறைவான ரன் குவிப்பு (முறையே 11 மற்றும் 26 ரன்கள்) இந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஜோ ரூட் 99 ரன்களை விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.