

மயிலம் கோவிலில் முருகன் 3 விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.
பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதி உலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிரகாரத்தில் வீதிஉலா நடக்கிறது.
பங்குனி உத்திரம் இங்கு 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதிஉலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.
இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதி உலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிரகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள்.
5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6-வது நாளன்று திரும்பி வருவார். மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான்.
கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதி உலா வருவது இவர்தான். இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்.