

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகிறது.
அதே நேரத்தில், கார்க் தீவில் நங்கூரமிட்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக புஷேர் மாகாணத்தின் துணை ஆளுநர் கூறுகிறார்.
உயிரிழப்பு:
பிராந்தியத்தின் சில பகுதிகளில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் ஈரானிய துணை ஆளுநர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல்களில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாக அந்த அதிகாரி கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த சில நாட்களாக ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை அமெரிக்க படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று நடத்திய கூட்டு தாக்குதல்களை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வெடித்த போர் கடந்த ஜூன் மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
போர்நிறுத்தம் ரத்து:
எனினும், ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள கடல்நீர் சுத்தகரிப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்களின் மீது அமெரிக்க படைகள் அதிகாலை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.