TN Assembly Election| தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது- தமிழிசை சவுந்தரராஜன்

TN Assembly Election| தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது- தமிழிசை சவுந்தரராஜன்

Published on
Summary

தமிழுக்கும், தமிழ்நாட்டை காப்பதற்காகவும் தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

தூத்துக்குடி:

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்க கூடிய ஒரு சம்பவமாக விளாத்திகுளத்தில் மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை கண்டிப்பதற்காகவும், பெண்ணினத்தை பாதுகாப்பு கொடுப்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வதற்காக நான் வந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக விளம்பர ஆட்சி தான் நடந்து வருகிறது. எவ்வளவு பிரச்சனை நடந்து வருகிற போதும் முதலமைச்சர் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த 5 வருடங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. 4 ஆயிரம் குடமுழுக்கு நடத்தி உள்ளதாக சொல்கின்றனர். ஒரு குடமுழுக்கு விழாவிலும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

நேற்று இஸ்லாமிய இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமிழின் அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் எல்லாம் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார். பாகுபாடின்றி எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் தமிழின் அடையாளம். தமிழின் அடையாளம் வந்தாரை வரவேற்பது தான் தமிழகத்தின் அடையாளம்.

தமிழின் அடையாளத்தை தி.மு.க. தொலைத்து வைத்து கொண்டிருக்கிறது. தமிழின் அடையாளத்தை மீட்பது தான் எங்கள் நோக்கம்.

அ.தி.மு.க. , பா.ஜ.க, இயல்பாக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி பலமாக இருக்கிறது.

எங்களை பொறுத்தமட்டில் யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை. இந்த கூட்டணியில் தி.மு.க,வை யாரெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருக்கிறது. மோசமான ஆட்சி நடத்துகின்ற தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

தமிழுக்கும், தமிழ்நாட்டை காப்பதற்காகவும் தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

தி.மு.க. ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது லஞ்ச குற்றசாட்டு உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை, கஞ்சா புழக்கம் பரவலாக உள்ளது.

அறிவாலயத்தின் அருகில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை கூட கூட்டணிக்கு அழைத்து தி.மு.க.வினர் சேர்க்கின்றனர்.

தி.மு.க.வினர் தோல்வி முகத்தில் இருக்கிறார்கள், பதற்றத்தில் இருக்கிறார்கள். நாங்கள் வெற்றி முகத்தில் இருக்கிறோம், நாங்கள் மக்களுக்காக கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழ் மக்களுக்காக கூட்டணி அமைத்திருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் 45 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். மன்மோகன் சிங் 15 முறை தான் வந்திருக்கிறார். ஒவ்வொரு முறை வரும்போதும் அரசாங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நல்ல திட்டங்களை சமர்ப்பிக்க தான் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com