தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும்.
தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினர் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது.

அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னியரசு அளித்த துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையுடன் நிறைவேறும்.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் - தி.மு.க. உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததன் மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையென்றாலும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும். தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

த.வெ.க. அரசு ஆட்சியமைக்க தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதி துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கது.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com