

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுமார் 50 பேரைமீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியையும், தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடும் பணியையும் லண்டன் போலீசார் துரிதமாக செய்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்திருந்த நிலையில், சிகிச்சையின்போது மேலும் ஒருவர் உயிரிந்தார்.
பிரிட்டனில் வரும் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரான லண்டனில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என தற்போது தெரியவந்துதது.
‘அப்ஸ்’ (Abz) என்ற சுருக்கெழுத்தால் லண்டன் போலீசார் அடையாளம் காட்டிய இந்நபர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் எனவும் 27 வயது வாலிபனான இந்நபர் பாகிஸ்தானில் இருந்து தனது பெற்றோருடன் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவன்.
இரண்டு குழந்தகளுக்கு தந்தையான இவன், கிழக்கு லண்டனில் உள்ள பார்க்கிங் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அவர்களின் கொடியுடன் லண்டனில் உள்ள பூங்காவில் முன்னர் பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட இரு சம்பவங்களில் இவன் எற்கனவே தொடர்புடையவன் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்கு முன்னதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்துபேரை விசாரணைக்கு பின்னர் போலீசார் இன்று விடுதலை செய்தனர்.