சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்ய முடியாமல் அவதி - இன்சுலின் விற்பனை அதிகரிப்பு

பூங்காக்கள், கடற்கரை பகுதிகளை மூடியதால் சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ‘இன்சுலின்’ மருந்துகள் விற்பனை அதிகரித்து உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறக்கப்பட்டு உள்ள 144 தடை உத்தரவால் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட கடற்கரை பகுதிகளும், அண்ணா நகர் டவர் பூங்கா உள்பட அனைத்து மாநகராட்சி பூங்காக்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் தினமும் கடற்கரை பகுதிகள், பூங்காக்களில் நடைபயிற்சி சென்று பழகியவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நடைபயிற்சி மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்த சர்க்கரை நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர். நடைபயிற்சி செய்ய முடியாததால் சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அவர்கள் தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் நடைபயிற்சி சென்றவர்களும் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளனர். உடலுக்கு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அவர்கள் கஷ்டப்பட்டு குறைத்த எடையும் அதிகரித்துள்ளது.

தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஒரு நாள் இடைவெளி விட்டாலே, அவர்களால் அடுத்த நாள் காலை அதே நேரத்தில் எழுந்திருக்க சிரமப்படுவார்கள். சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்ளும். எனவே நடைபயிற்சியை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு சிலர் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா பரவும் வேளையில் நடைபயிற்சி முக்கியம் அல்ல. உயிர்தான் முக்கியம் என்ற மனநிலையில் பலர் நடை பயிற்சியை முழுமையாக கைவிட்டு தங்களது வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.

நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்த சர்க்கரை நோயாளிகளில் ஒரு சிலர் தற்போது ரத்த பரிசோதனை மையங்களுக்கு சென்று பரிசோதித்து கொள்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளில் வாங்கி வைத்துள்ள கருவி மூலம் பரிசோதித்து கொள்கிறார்கள். இந்தநிலையில் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ‘இன்சுலின்’ மருந்துகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com