

திருப்போரூர்:
திருப்போரூர் ஒன்றியத் திலடங்கிய முள்ளிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் தங்களுடைய கட்சி பேனர்களை தனித்தனியே வைத்துள்ளனர்.
இதில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி பேனர் கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த புரட்சிபாரதம் கட்சியினர் தான் காரணம் என விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மானாம்பதி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த புரட்சிபாரதம் கட்சியைச் சேர்ந்த 10 பேர், புகார் செய்தவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மானாம்பதி போலீசார் வழக்குபதிவு செய்து முள்ளிப்பாக்கம் புரட்சிபாரதம் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெயபிரகாஷ், குணசீலன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சண்முகம், குகன், ராஜன், கல்யாணசுந்தரம், பார்த்திபன் உள்ளிட்ட 8 பேரை தேடிவருகின்றனர்.