தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ்

மருத்துவம் ஒரு புனிதமான சேவை. அது வெறும் அறிவியல் மட்டுமல்ல. கலையும் சேர்ந்தது தான் மருத்துவம்.
Minister Arun Raj
Published on

சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-

மக்களின் இதயங்களில் அமர்ந்து துயர் துடைப்பவராக முதலமைச்சர் விஜய் விளங்குகிறார். தனது ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு உத்தரவிலும் மனித நேயமும், இந்த மண் மீதும், மக்கள் மீதும் உண்மையான அன்பும், அக்கறையும் கொண்ட ஒரு உன்னத தலைவர்தான் நமது முதலமைச்சர் விஜய்.

அன்பு சாம்ராஜ்யம்

நான் பெருமையோடு சொல்வேன். தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது அன்பு சாம்ராஜ்யம். இதை யாராலும் ஒரு போதும் அசைக்க முடியாது.

மருத்துவம் ஒரு புனிதமான சேவை. அது வெறும் அறிவியல் மட்டுமல்ல. கலையும் சேர்ந்தது தான் மருத்துவம். ஒரு நோயாளியின் பாதிநோய் மருத்துவரின் கனிவான வார்த்தைகளிலேயே குணமாகி விடும். முக்கியமாக நாம் நலமாகி விடுவோம் என்ற நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் ஒரு டாக்டரின் முதல் கடமை. முதல் பணி. டாக்டர்களை போலவே சுகாதார ஆய்வாளர்களின் பணியும் மிகவும் உன்னதம் ஆனது.

நம்பிக்கை

அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் இல்லை. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும்போது, வெறும் நோயோடு மட்டும் வருவதில்லை. இந்த அரசு நம் அண்ணன் விஜய் தலைமையிலான அரசு தங்களை நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்.

நீங்கள் ஏழை, எளிய மக்களிடம் காட்டும் பரிவும், கனிவான பேச்சும், அன்பான வார்த்தைகளும் தான் இந்த அரசின் மீதான அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும்.

நலம் டி.என். இணைய தளம்

முதலமைச்சர் விஜய் இன்று நலம் டி.என். இணைய தளத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரி மேம்பாட்டிற்கு நிதி வழங்க முன் வாருங்கள். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் லட்சமாக இருந்தாலும் உங்களது பங்களிப்பை செலுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com