மருத்துவ துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கும் பணி ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
மருத்துவ துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
Published on

சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறையின் சார்பில் சுகாதாரத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கத்தின்கீழ் 1,832 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 345 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் காலிப்பணியிடங்களாக உள்ள 1,071 உதவி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றில் முதற்கட்டமாக 320 உதவி மருத்துவர்களுக்கு ஏற்கனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மீதமுள்ள 751 உதவி மருத்துவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணியிடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

சுகாதார ஆய்வாளர்

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பில் சுகாதார ஆய்வாளர் (நிலை–II) பணியாளர்கள் மிக முக்கியமான களப்பணியாளர்களாக விளங்குகின்றனர். நோய்க் கண்காணிப்பு, தொற்றுநோய் பரவல் விசாரணை, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்புப் பணிகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், குடிநீர் தரக் கண்காணிப்பு, தேசிய பொது சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பொது சுகாதார அவசரநிலை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார ஆய்வாளர் (நிலை–II) பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, 1,393 பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட 1,393 சுகாதார ஆய்வாளர் (நிலை–II) பணியாளர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

உபகரணங்கள்

தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்திடும் வகையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின்கீழ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப் பிரிவுக் கட்டடத்தின் இரண்டாம் தளத்திற்கு மேல் 17 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கை வசதியுடன்கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, 180 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது மருத்துவ வார்டுகள், செவிலியர் நிலையங்கள், மருத்துவர் அறைகள், பரிசோதனை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள நான்கு தளங்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம்,

பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு 57 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடம்; புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் 45 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள 78 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள்,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் 139 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்களை திறந்து நவீன மருத்துவ உபகரணங்களையும் முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் ரா. அழகுமீனா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அ. ராஜ்மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் எ. சோமசுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சுவாரஸ்ய சம்பவங்கள்

பணி நியமன ஆணை பெற்ற இளைஞர் ஒருவர் உற்சாக மிகுதியால் முதலமைச்சரை மேடையிலேயே அன்புடன் கட்டி அணைத்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். எந்த தயக்கமும் இன்றி முதலமைச்சர் விஜயும் அன்போடு அரவணைத்து ஆணையை வழங்கினார்.

பணி நியமன ஆணை பெற்ற பெண் மருத்துவர் முதலமைச்சர் விஜயிடம் ஆட்டோகிராப் கேட்டார். உடனே அவர் தனது ஆட்டோகிராப்பை போட்டு கொடுத்தார்.

பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com