‘எனக்கு ஆதியும், அந்தமும் அதிமுகதான்... வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து வருத்தம் இல்லை’ - தனபால் உருக்கம்

எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதில் வருத்தம் ஏதுமில்லை. உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது என அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
‘எனக்கு ஆதியும், அந்தமும் அதிமுகதான்... வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து வருத்தம் இல்லை’ - தனபால் உருக்கம்
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோட்டையாக கருதப்படும் அவிநாசி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அதேசமயம் இத்தொகுதியில் பலமுறை தேர்வு செய்யப்பட்ட, தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை.

இதனால் அவரது மகன் தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். தனபாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது அதிமுகவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில்,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கிய 1972 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கழகப் பணியாற்றி வருகிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1977-80, 1980-84 மற்றும் 1985-88 என தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றி இருக்கிறேன்.

அவரது மறைவிற்குப் பின்பு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன் நான். 2001-2006, 2011-2016, 2016-2021 மற்றும் 2021-2026 என நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2001-2006 காலகட்டத்தில், ஆதி திராவிடர் நலன், உணவு, கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு அம்மா என்னை அமைச்சராக நியமித்தார்கள்.

2011 ஆம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கிய அம்மா, 2012 ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள். 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக போவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் நான்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு வழங்கினார்கள். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலம் விசாரிக்கவோ இல்லை.

இந்தத் தருணத்தில், 1988 ஆம் ஆண்டு எனக்கு விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எனக்குத் தேவையான முதலுதவியை அளித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மா அவர்களை நினைத்துப் பார்த்தேன்.

என் கண்களில் நீர் ததும்புகிறது. அந்தத் தாயின் கருணைக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் லோகேஷ் தனபால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில், எனக்கு ஆதியும், அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com