

நெதர்லந்திடமிருந்து சோழர் காலத்துச் செப்புத் தகடுகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லந்து வருகையின் போது அவரிடம் அந்தத் தகடுகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க லைடன் செப்புத் தகடுகளை நமது தாய்நாட்டிற்கு வெற்றிகரமாக மீட்டுக் கொண்டு வந்ததற்காக, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விலைமதிப்பற்ற சோழர் காலக் கல்வெட்டுகள், தமிழ் நாகரிகத்தின் பெருமைமிக்க சின்னமாகவும், மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் நிர்வாக மேன்மையின் சின்னமாகவும், தமிழ் மக்களின் கடல்சார் பெருமிதத்தின் சின்னமாகவும் திகழ்கின்றன.
அவை மீண்டும் நம்மிடம் திரும்ப வந்திருப்பது, ஒவ்வொரு தமிழருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அளவற்ற பெருமிதம் தரும் தருணமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.