

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் ரெயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிப்பது என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அரசின் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் ஆர்ச், செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வனவிலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நவீன அம்சங்களுடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த ரெயில் நிலையத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று மாலை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.