DMK| ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் தி.மு.க.வினர்- அன்புமணி தாக்கு

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத முதலமைச்சராக உள்ளார்.
DMK| ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் தி.மு.க.வினர்- அன்புமணி தாக்கு
Published on

கடலூர்:

தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. தி.மு.க. ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசப்படுத்தியது போதும். பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். தமிழ்நாட்டை மன்னர்கள், ஆங்கிலேயர்கள், முதலமைச்சர்கள் பலர் ஆண்டு உள்ளனர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஆண்டு வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பத்திரமாக திரும்ப வருவார்களா? என பெண்கள் வயிற்றில் நெருப்பு கட்டி வைத்துக்கொண்டு தினம்தோறும் எதிர்நோக்கி வருகின்றனர். தகுதி இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ இதனை சொல்லவில்லை. முதலமைச்சர் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இவருக்கு எதற்கு முதலமைச்சர் பதவி இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 3 மகள்களை பெற்ற தந்தையாக சொல்கின்றேன். உணர்வுபூர்வமாக கூறுகின்றேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத முதலமைச்சராக உள்ளார். ஒரு நாளைக்கு 5 கொலைகள் என 5 ஆண்டுகளில் 7,832 கொலைகள் நடந்துள்ளது. இதில் 1973 பெண்கள் கொலை செய்துள்ளனர். 361 குழந்தைகள் கொலை செய்துள்ளனர். இதில் 38 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூரத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம் .

ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 44 ஆயிரம் குற்றங்கள் நடைபெற்று உள்ளது. இதில் 2021 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். 62 ஆயிரம் குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகவும் இதில் 27 ஆயிரம் குற்றங்கள் போஸ்கோ வழக்கிலும் உள்ளது. இதனை எல்லாம் பார்க்கும் போது வெட்கக்கேடான ஆட்சி. இதற்கு முதல் காரணம் முதலமைச்சர். அடுத்தது கள்ள சாராயம், டாஸ்மாக் காரணமாகும்.

இங்குள்ள 9 சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழந்து தோற்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். கடந்த முறை நீங்கள் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுத்ததால் எல்லா துறைகளும் தோல்வி. சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் தி.மு.க . நிர்வாகி சிறிய பெண் குழந்தையை கொலை செய்துள்ளார். இதனால் தமிழக மக்கள், பெற்றோர்கள் கண்டிப்பாக முதலமைச்சரை மன்னிக்க மாட்டார்கள். எங்கள் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மீட்டெடுப்போம். புதிதாக நல்லாட்சி கொடுப்போம். நான் கோபத்துடன் இங்கிருந்து செல்கின்றேன். எனது கோபம் அடங்க வேண்டும் என்றால் மே 4-ந்தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்த பிறகுதான் கோபம் தணியும். ஆகையால் நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் நிச்சயமான மாற்றத்தை கொண்டு வருவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com