

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசுகையில், த.வெ.க.வில் புதிதாக இணையும் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம். அ.தி.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு என்ன பதவியோ அதை முதலமைச்சர் வழங்குவார் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் இபிஎஸ். முதல்வர் ஆவதற்காக இபிஎஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் அதிமுக தற்போது இப்படி உள்ளது. கலைஞரின் அனைத்து உண்மையான விசுவாசிகளையும் தவெகவிற்கு வரவேற்கிறோம். வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும் என திட்டவட்டமாக கூறினார்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், த.வெ.க.வில் எங்களை இணைத்து கொண்ட முதல்வர் விஜய்க்கு நன்றி. கடந்த 9 ஆண்டுகளாக எங்கு செல்வது என திக்கு தெரியாமல் இருந்தோம். ஜெயலலிதாவை போன்று தமிழக முதலமைச்சரை மக்கள் பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தவெக வெற்றி பெற பாடுபடுவோம். இன்னும் பலபேர் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய உள்ளனர் என்றார்.