

பெரம்பலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் மண்டல மாநாடு என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு மாநாட்டினை நடத்தி உள்ளது. இதில் இருந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளது என்பது தெரிகிறது. தமிழகத்தில் வலுப்பெற்று வரும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்.
சென்னை விமான நிலையத்தில் டீ குடிக்க சென்ற முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விலையை கேட்டு விட்டு டீ குடிக்காமல் சென்றுள்ளார். இதில் இருந்து அவர் மக்களை விட்டு எவ்வளவு விலகி இருக்கிறார் என்பது தெரியவருகிறது. கிராமப்புறத்தில் டீ விலை எவ்வளவு, விமான நிலையத்தில் எவ்வளவு என்பது கூட தெரியாமல் இருக்கிறார்.
தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் (டி.டி.வி.தினகரன் அணியினர்) நன்றி மறக்காமல் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி உள்ளனர். அதை படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். ஆதரவாக படம் எடுத்தால் மாலை போடுவார்கள், எதிராக எடுத்தால் தாக்குவார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கால அவகாசம் உள்ளது. அதுவரை பொறுமையோடு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக பயமுறுத்துகிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்து தான் பார்க்கட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.