4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்
திமுக தலைவர் முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி, விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கடலில் மூழ்கடிக்கப்பட்ட மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களின் உடல்களும் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்ற பேரிடி செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது. அராஜகமானது.

இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பா.ஜ.க. அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர், இந்தியா திரும்பியவுடன் இலங்கை கடற்படை 4 மீனவர்களை கொன்றிருப்பது, இலங்கையில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, மத்திய அரசையோ துளி கூட மதிப்பில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எனவே தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com