

புதுச்சேரி தேர்தல் தோல்விக்கு காங்கிரசை குறை கூறுவதால் திமுக தவறை மறைக்க முடியாது என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை ஏற்றுள்ளோம். கூட்டணி கட்சியை சேர்ந்த சிலர் காங்கிரஸ் கட்சி மீது தோல்விக்கு பழி போட்டு சேறை பூசுவது போல் விமர்சனம் செய்கிறார்கள். கூட்டணி தலைவர்களின் பேராசை காரணமாக தோல்வி ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு தெரியும்.
தொகுதி பிரிப்பதில் பிரச்சினையும், காலதாமதமும் ஓர் காரணம். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக குறைகூறுகிறார்கள். தேர்தலில், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வெல்லும் தொகுதிகளில் தவெக கணிசமான வாக்கு பெற்றதால் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸை விமர்சிப்பது புதுச்சேரி மக்களை விமர்சிப்பதற்கு சமம்.
தோல்வி எதனால் என திமுக சுய பரிசோதனை செய்ய வேண்டும். காங்கிரஸை குறை கூறுவதால் அவர்கள் செய்த தவறை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஒரு சில தலைவர்கள் மிகைப்படுத்தி பேசி அழுத்தம் தந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டு, கடைசி நேரத்தில் கையிலிருந்த ஆட்சியை விட்டு விட்டோம்.
இதற்கு கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சிகள் பொறுப்பு ஏற்கவேண்டும். தோல்விக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றதுபோல் இதர கட்சிகளுக்கும் பெருந்தன்மையோடு பொறுப்பு ஏற்க வேண்டும். கூட்டணியில் சில கட்சிகள் சேர்வதும், பிரிவதும் அரசியலில் நடக்கும் நிலவரங்கள்தான். இதற்காக காங்கிரசை திமுக விமர்சிப்பதை ஏற்க முடியாது.
இப்படி பேசினால் மனக்கசப்பு ஏற்படும். அரசியலில் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறும். தனிப்பட்ட வெறுப்பு இருக்கக்கூடாது. தாங்கள் புனிதர்கள் போலவும், காங்கிரஸ் துரோகம் செய்ததுபோலவும் மக்கள் மத்தியில் பிரம்மையை ஏற்படுத்தக்கூடாது. யாரின் பேராசையால் ஆட்சியை இழந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அதில் ஈடுபட்ட தலைவர்கள்தான் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். மற்றவர்களை கைகாட்டி விட்டு புனிதர்கள்போல் செல்லக்கூடாது. கூட்டணி கட்சி தலைவர்களின் தவறான அணுகுமுறையால்தான் தோல்வி ஏற்பட்டது.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி உள்ளதா என்பது முடிவெடுத்த பிறகு தெரிவிக்கப்படும். காங்கிரஸ் பொறுப்பாளர்கள் புதுச்சேரி வந்து கருத்து கேட்டு முடிவு எடுப்பார்கள். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது, தவெகவுடன் கூட்டணியா என்பதும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
புதுச்சேரியில் அரசு பணிகள் ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டு கோப்புகள் அலுவலகத்தில் தூங்குகிறது. அமைச்சரவையை முழுமையாக நியமிக்கவில்லை. 2 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை. காலதாமதத்துக்கான காரணம் என்ன என்பதை முதல் அமைச்சர் ரங்கசாமி விளக்க வேண்டும்.
மேகதாது அணையால் காவிரி கடைமடை பகுதி, காரைக்கால் பாதிக்கும் என்பதால் முழுமையாக புதுச்சேரி காங்கிரஸ் கர்நாடக அரசை எதிர்க்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமரை பார்த்து இந்த விஷயத்தில் கோரிக்கை வைத்துள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்ன செய்கிறார்? என கேள்வி எழுப்பினார்.