

புதுவை சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் அருள்விசாகம்.
சங்கத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்த அருள்விசாகம் சுகாதாரத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தார். ஆனால் இயக்குனர் நடவடிக்கை எடுக்காமல் அருள்விசாகத்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக தலித் பழங்குடியின கூட்டமைப்பினர் அருள் விசாகத்தை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அருள்விசாகன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திட்ட இயக்குனர் டாக்டர் அருள்விசாகம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது போராட்டம் நடத்தி வந்த டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.