

புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் நாள் விழாவாக காமராஜர் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் கைலாஷ்நாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பொருளாதாரத்தில் முன்னேற கல்வி அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கும் வசதியை உருவாக்கியவர் காமராஜர். இதனால்தான் கல்விக்கண் திறந்த காமராஜர் என அழைக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அதிகாரிகளிடம் பேசும்போது, அவர் எத்தகைய திட்டங்களை கொண்டு வந்து ஏழை மாணவர்களை படிக்க வைத்தார் என்பது தெரியும். இன்று பல்வேறு பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பலர் நாங்கள் காமராஜரால்தான் படித்தோம் என கூறுவார்கள்.
ஆட்சியில் மட்டுமல்லாது, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு எடுத்துக்காட்டாக காமராஜர் விளங்கினார். அரசியல் சிக்கல்களையும் எளிதில் தீர்த்து வைத்தவர். அவரை விரும்பாத தலைவர்களே இல்லை. பல மாநிலங்களிலும் காமராஜர் ஆட்சி எப்போது வரும்? என கேட்கின்றனர். மத்திய அரசு அவருக்காக நாணயமும் வெளியிட்டுள்ளது.
புதுவையில் ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்காகவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 100 சதவீதம் கல்வியை புதுவையில் தர முடியுமா? என்ற கேள்வி இருந்தது. தற்போது பள்ளி கல்வி மட்டுமின்றி, கல்லூரி கல்வியையும் வழங்க முயற்சித்து வருகிறோம்.
புதுவையில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். பள்ளிகல்வி முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வழி செய்துள்ளோம். இதனால் வரும்காலத்தில் வீட்டில் உள்ள அத்தனை குழந்தைகளும் பட்டம் பெற்றவர்கள் என்ற நிலை இருக்கும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெற முடியுமா? என்ற நிலை இருந்தது. இதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கினோம். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்தும், பொறியியல், கலை, அறிவியல் என உயர்கல்வி படிக்கின்றனர்.
மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு 37 அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்கிறது. இந்த மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது. இதேபோல பிற படிப்புகளுக்கும் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான சிறுதானிய உணவு தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல சீருடை தையல்கூலியும் உயர்த்தி வழங்கப்படும். பெற்றோர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மாணவர்கள் கல்வி பயில அரசு தொடர்ந்து உதவிகளை செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், அழகு, ரவிக்குமார், அய்யப்பன் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.