

புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஓராண்டுகாலம் நிறைவடைந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றது முதல் புதுவையில் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. திட்டமில்லா செலவிற்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டாக குறிப்பிட்ட நிதியையே ஒதுக்கி வருகிறது.
பிற மாநிலங்களில் திட்டமில்லா செலவிற்கு ஆண்டிற்கு 10 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி புதுவைக்கு கடந்த 5 ஆண்டுக்கு கூடுதலாக ரூ.500 கோடி நிதி தர வேண்டும். 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதால் மாநில அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
இந்த செலவுத் தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிதியை பெற மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதோடு கவர்னர் கிரண்பேடியிடம் அனுப்பப்பட்ட சில கோப்புகளை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெற முழு கல்வி உதவித் தொகை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளை கவர்னர் கையெழுத்திடாமல் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
காங்கிரஸ் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேரின் வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கும் கவர்னர் அனுமதி தரவில்லை. அந்த கோப்பையும் கவர்னர் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு பிரச்சினை, மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை ரத்து ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மந்திரிகளை சந்தித்து நிதி மற்றும் கோப்புகளுக்கு அனுமதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் ஷாஜகான், கமலகண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு 2 நாட்கள் முகாமிட்டு மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் அமைச்சர் நமச்சிவாயம் நாளை காலை டெல்லிக்கு சென்று அவர்களோடு இணைந்து மத்திய மந்திரிகளை சந்திக்கிறார்.