

கோவை:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருவதற்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் மலைவாசஸ்தலங்களான நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் முறை இப்போதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள மலை சுற்றுலா தலமான வால்பாறைக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது வால்பாறை செல்வதற்கும் இ-பாஸ் நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மலை வாசஸ்தலங்களில் கொரோனாவின் பரவல் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்குகாரணம் அங்கு நிலவும் குளிர் தான். அதனால் தான் மலைப்பகுதிகளுக்கு அதிகம் பேர் செல்வதை தடுக்கும் வகையில் இ-பாஸ் நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு செல்பவர்களின் இ-பாஸ்களை அந்த மாவட்ட கலெக்டரே நேரடியாக ஆய்வு செய்து அனுமதி வழங்குவதில் இருந்து அங்கு இ-பாஸ் பெற்று செல்வது எவ்வளவு கடுமையாக்கப்பட்டுள்ளது என்பது புரியும்.
தற்போது வால்பாறைக்கு செல்பவர்கள் இ-பாஸ் பெற்றுத்தான் செல்ல வேண்டும். இதற்கு காரணம் இ-பாஸ் நடைமுறை இல்லாத சமயத்தில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் சுத்தமான காற்றை சுவாசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் சுற்றியுள்ளனர். இதற்கு அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர். இதனால் தான் வால்பாறைக்கு பலரும் கூட்டமாக செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகம் பேர் வசிக்கும் பகுதியில் கொரோனா வேகமாக பரவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் அவர்களுக்குள் தொற்று பரவுவதோடு அங்கு வசிப்பவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ் இல்லை என்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.