

மகராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவ்சாகேப் ராஜாராம் வக்காசவ்ரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பால்கர், சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்பிக்களின் கட்சி மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா உருவெடுத்துள்ளது.
மறுபுறம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பலம் வெறும் 3 எம்பிக்களாகக் குறைந்துள்ளது.
உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
பண பலத்தைக் காட்டி எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே,
"தங்களது தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவுமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வளர்ச்சி நிதியை நாங்கள் வழங்குவோம்.
அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் நாங்கள் வழிவகை செய்துள்ளோம். ஒரு தலைவர் கட்சியில் இருக்கும் வரை நல்லவராகவும், வெளியேறியவுடன் கெட்டவராகவும் மாறுவது உத்தவ் அணியின் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம் மேற்கு வங்க எதிர்க்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) இணைந்த 20 அதிருப்தி எம்.பிக்களுக்கும் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, தனியிடம் ஒதுக்க சம்மதித்துள்ளார்.
தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உள்ளது. இந்தியா கூட்டணியின் பலம் 181 ஆகவும், இதர கட்சிகள் பலம் 41 ஆகவும் உள்ளது.
மக்களவையின் மொத்த பலம் 540 ஆக உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவைப்படுகிறது.
திங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் கூடும் நிலையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தனது கூட்டணியின் பலத்தை 360க்கு நெருக்கமாக கொண்டுவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
மகாராஷ்டிராவில் தனது கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் 8 எம்.பிக்களை கொண்ட சரத் பவார் தேசியவாத காங்கிரசையும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு சரத் பவார் சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் ஆனால் மறைந்த அஜித் பவரின் மனைவியும் அவ்வணியின் தலைவியுமான சுனேத்ரா பவார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரத் பவாரின் பிரிவு இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.
இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.