

வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே அவர் தனது இந்தியக் குடியுரிமையை இழந்துவிட மாட்டார் என்றும், ஒருவரது குடியுரிமையைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த' நடவடிக்கையின் போது, லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களுக்குப் பொது விநியோகத் திட்டம், 'அன்னபூர்ணா யோஜனா' போன்ற சமூக நலத் திட்டங்களின் பலன்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் மறுக்கப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் பிரமுகர் பிரசென்ஜித் போஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கவும், சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களை நீக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒரு நபர் இந்தியக் குடிமகனா இல்லையா என்பதை இறுதி செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை. குடியுரிமைச் சட்டத்தின்படி அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட உடனே ஒருவரது குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடாது. தேர்தல் ஆணையம் ஒருவரது குடியுரிமை குறித்து சந்தேகம் கொண்டால், அந்த விவகாரத்தை உரிய விசாரணைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத்தான் பரிந்துரைக்க வேண்டும்.
மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்கும் வரை, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட நபர்களுக்கான சமூக நலத்திட்ட உதவிகளையும், இதர சிவில் உரிமைகளையும் மாநில அரசுகள் நிறுத்தக் கூடாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், "மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 34 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் சிறப்பு தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை வெறும் 38,000 மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், விசாரிக்கப்பட்ட மனுக்களில் 70% பேரின் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டது தெரியவந்து, அவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, முறையான விசாரணை முடியும் முன்பே ஏழை எளிய மக்களின் ரேஷன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பது சட்டவிரோதமானது" என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், மேற்குவங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.