இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ஹைட்ரஜனால் உருவாகும் மின்சாரத்தால் இயங்கும் ரெயில் ரூ.141 கோடியில் இந்தியாவில் தயாரிப்பு.
PM Modi
Published on

நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ஹைட்ரஜன் ரெயில்

இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் ரெயில் என்​ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ​நிறு​வனம் ​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது.

தொடங்கி வைத்தார்

ஹைட்​ரஜன் ரெயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணி​கள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறி​முகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்தது.

இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்​ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

ஐ.சி.எப். தொழிற்​சாலை

ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்​டு இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்​கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​று சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரெயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் முழு​மை​யாக வடிவமைக்​கப்​பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.

குறைந்த கட்டணம்

பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் - சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரெயில் நிலை​யங்​களை இணைக்கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த ரெயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயண கட்​ட​ணம் மிக குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை நிர்​ண​யம் செய்யப்​பட்​டுள்​ளது.

நவீன தொழில்நுட்பம்

மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரத்தை பெறும் வழக்கமான மின்சார ரெயில்களை போல் அல்லாமல் ஹைட்ரஜன் ரெயிலானது ஹைட்ரஜன் - ஆக்சிஜன் வேதிவினை மூலம் ரெயிலுக்கு உள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும்.

1200 கிலோ​வாட் திறன்கொண்ட ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல உந்து விசை அமைப்பின் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரெயில் இயங்​கு​கிறது. ரெயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்பேட் பேட்டரி​களும், ரெயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறு உரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்கப்​பட்​டுள்​ளன.

10 பெட்டிகள்

பிரதமர் மோடிதொடங்கி வைத்துள்ள ஹைட்ரஜன் ரெயில் 2 டிரைவர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்​டிகள் என 10 பெட்​டிகளை கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600-க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றி செல்​லும் திறன் கொண்​டது.

சோதனை​யின்போது இந்த ரெயில் அதிகபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாது​காப்​பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது. இந்த ரெயில் ஜிந்த் - சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும்.

பாதுகாப்பு அமைப்பு

ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரெயில் என்ற சிறப்பையும் ஹைட்ரஜன் ரெயில் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com