

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இந்தப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற சுற்றுலா படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மீட்புக்குழு அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, வியட்நாம் இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் வலைத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு துரதிர்ஷ்டவசமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்து குறித்த துயரச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்திய அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.