

ரெயில்வே, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (வெள்ளிக்கிழமை) ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த திட்டங்கள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த பயணத்தின்போது, 26,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
அத்துடன் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். மேலும், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஜிந்த் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுகிறார்.
எக்ஸ் பதிவு:
"ரெயில்வே, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் பல துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மக்களின் மத்தியில் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இத்திட்டங்கள் மக்களின், குறிப்பாக நமது 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) வாழ்க்கையில் மிக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜிந்த் நகரிலிருந்து, ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஹைட்ரஜன் ரெயில்:
"இத்தகைய ரெயில்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. ரெயில்வே துறையில் தூய்மையான தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும்," என்று அவர் கூறினார்.
ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில், சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கிறார்.
ஜிந்த் நகரில் பிற பணிகளும் தொடங்கி வைக்கப்படும் என்றும், அவற்றில் டெல்லி-அமிர்தசரஸ், அம்பாலா-கலா ஆம்ப் (Kala Amb), ஜிந்த்-கோஹானா (Gohana) ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் அடங்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
வளர்ச்சிப் பணி:
சண்டிகரில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. நாளைய நிகழ்ச்சியின் போது, 4,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படும்.
குறிப்பிடத்தக்க பணிகளில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) மேம்பட்ட தாய்-சேய் நல மையம் மற்றும் மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம் ஆகியவற்றை தொடங்கி வைப்பதும் அடங்கும்.
இந்த சாலை திட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
தனித்துப் போட்டி:
ஜலந்தரில் நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மக்களுடன் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலைத் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
"பஞ்சாப் மாநிலம் பா.ஜ.க.வை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எங்கள் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாபில் உள்ள எனது சகோதர-சகோதரிகளுக்கு வளமான வாழ்வையும், 'எளிதான வாழ்க்கை முறையையும்' உறுதி செய்யும்," என்று அவர் கூறினார்.