

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்தமுறை தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தாலும், மீண்டும் தாக்கல் செய்ய மத்திய ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் தி.மு.க. ஒருபோதும் இடம்பெறாது.
இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்பதால் அவை ஒன்றிணைய வாய்ப்பில்லை.
கடந்த 8-ம் தேதி நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பதும், நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம் என்பதும் உண்மைதான்.
தவெக அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், நாங்கள் தொடர்ந்து திமுக எம்பிக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
திமுகவுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. திமுக இன்னும் ஒரு எதிர்க்கட்சியாகவே உள்ளது. அது (மத்தியில்) ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவோ மாறவில்லை.
ஸ்டாலின் கூறி இருப்பதைப் படித்தேன். பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு இல்லை என்பது அதில் இருந்து தெளிவாகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா வரும்போது திமுக அதற்கு எதிராக நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.