

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
ஓமன் நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'மொம்பாசா' மற்றும் 'அல் பாஹியா' ஆகிய இரண்டு அமீரக எண்ணெய் சூப்பர் டாங்கர் கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை குரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
மொம்பாசா கப்பலில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி ஒருவர் இந்த கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டினர் உட்பட மொத்தம் 8 மாலுமிகள் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ஏவுகணை வீச்சால் இரு கப்பல்களிலும் ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தவறு கப்பல் ஊழியர்கள் பக்கமே இருப்பதாகக் கூறியது.
விதிமீறலில் ஈடுபட்ட அந்த இரு சூப்பர் டாங்கர் கப்பல்களும் தங்களது திசைகாட்டி மற்றும் கடல்சார் வழிசெலுத்தல் அமைப்புகளை வேண்டுமென்றே அணைத்துவிட்டன. ஆபத்தான கண்ணிவெடிகள் நிறைந்த கடல் பகுதியில் பயணிக்க முயன்ற அவற்றுக்கு எங்களது படைகள் தொடர்ந்து எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கின.
ஆனால், அவர்கள் அதை முழுமையாகப் புறக்கணித்ததாலேயே கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டு முடக்கப்பட்டன. மேலும், அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரிலேயே இந்தக் கப்பல்கள் சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்தியதாகவும், இந்த பதற்றத்திற்கு அமெரிக்காவே முழு பொறுப்பு என்றும் ஈரான் குற்றம் சாட்டியது.
இந்தத் தாக்குதலை "வெளிப்படையான அராஜகத் தாக்குதல்" எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நடப்பு 2026 பிப்ரவரி முதல் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் தீவிர மோதல் போக்கு, தற்போதைய இந்த கப்பல் தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் கடல் முற்றுகை காரணமாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், சரக்கு கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.