புனேவில் பரவும் கொரோனா தொற்று: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்று ஆங்காங்கே நிலவி வந்தாலும், பரிசோதனைகள் குறைந்திருந்ததால் அது வெளியில் தெரியவில்லை என்றார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், இது புதிய அலைக்கான அறிகுறி அல்ல என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பாதிப்புகள் அனைத்தும் லேசான அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றன.

புள்ளி விவரம்

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 48 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு வரை இந்த தொற்று படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. இந்த ஆண்டின் கணக்குப்படி ஜனவரியில் 3, பிப்ரவரியில் 1, ஜூன் மாதத்தில் 11 மற்றும் ஜூலை மாதத்தில் 21 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா பரிசோதனைகளை தாமாக முன்வந்து செய்து கொண்டவர்களை விட, வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முந்தைய உடற்தகுதி பரிசோதனைகளின் போதே பலருக்கு தொற்று இருப்பது தற்செயலாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தற்போது வழக்கமான இன்ப்ளூயன்ஸா காய்ச்சலை போன்ற ஒரு போக்கை நோக்கி மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறி

2023-ம் ஆண்டிற்கு பிறகு கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள முதல் குறிப்பிடத்தக்க உயர்வு இதுவென்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து ஜஹாங்கீர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் பியூஷ் சௌத்ரி பேசுகையில், கடந்த சில நாட்களில் கொரோனா மற்றும் இன்ப்ளூயன்ஸா ஆகிய இரு பாதிப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தங்கள் மருத்துவமனையில் மட்டும் அண்மை நாட்களில் 7 முதல் 8 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு மருத்துவ மையத்திலேயே இந்த அளவு பாதிப்பு இருந்தால், நகரம் முழுவதும் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தத் தொற்றானது ஓமிக்ரான் வகையை விடவும் லேசானதாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 5 நாட்கள் வரை இருமல், சளி, தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. தீவிர அறிகுறிகள் காரணமாக அல்லாமல், பிற மருத்துவ பிரச்சனைகளுக்காக பரிசோதனை செய்து கொண்ட போதே பலருக்கு தொற்று உறுதியானது. லேசான சளி உள்ள பலர் பரிசோதனை செய்து கொள்ளாததால், சமூகத்தில் உண்மையான பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பரிசோதனை

சிம்பயோசிஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஜூபிடர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் சுஜாதா ரெகே கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொற்று ஆங்காங்கே நிலவி வந்தாலும், பரிசோதனைகள் குறைந்திருந்ததால் அது வெளியில் தெரியவில்லை என்றார். பொதுவாக பயன்படுத்தப்படும் கீழ் சுவாச பாதை மல்டிபிளக்ஸ் சோதனைகளில் இந்தத் தொற்று கண்டறியப்படுவதில்லை. ஆனால் மேல் சுவாசப் பாதை சோதனைகள் மூலம் இது எளிதாகக் கண்டறியப்படுகிறது. ஒரே மாதிரியிலிருந்து பல்வேறு வைரஸ்களைக் கண்டறியும் மேம்பட்ட மூலக்கூறு சோதனைகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், கொரோனா பாதிப்புகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலைமை புதிய அலையை ஒத்திருக்கவில்லை என்று உறுதியளித்த அவர், இது கூடிக்குறைந்து வரும் ஒரு சாதாரண சுவாச வைரஸ் தொற்று போன்றதே என்றார். இதனுடன் சேர்த்து மருத்துவமனைகளில் இன்ப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் டைபாய்டு காய்ச்சல்களும் தற்போது அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்காணிப்பு

ஜூபிடர் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஷ்ரத்தா குல்கர்னி தெரிவிக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளை தாம் எதிர்கொண்டதாக கூறினார். ஏற்கனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு, பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு வந்த நோயாளிகளை பரிசோதித்த போது இந்தத் தொற்று உறுதியானது. தற்போது வரை அனைத்து பாதிப்புகளும் லேசானவையாகவே இருந்தாலும், அடுத்த சில வாரங்களுக்கு இந்தத் தொற்றின் பரவல் போக்கை உன்னிப்பாக கண்காணிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com