டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கைது

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கைது
Published on

புதுடெல்லி:

அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர், இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர். தகவலை காண்பித்தனர். தொடர்ந்து போலீசார் கேட்டுக் கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானத்தை புறப்படவும் விடவில்லை. விமானம் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து துணை ராணுவப் படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, உத்தர பிரதேசம் மற்றும் அசாமில் பவன் கேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் அவரை விடுவிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com