

இந்திய பாரளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாடுவதை அவமதிப்பவர்களுக்கோ அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்துபவர்களுக்கோ தண்டனை வழங்கும் மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு அதன்பின் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டமானால், வந்தே மாதரம் பாடலை உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைப்படி படிக்கவில்லை என்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும். இதில் 6 பத்திகள் உள்ளன. அதில் இரண்டு பத்திகளுக்குப் பின் இந்து மத கடவுகளை போற்றி வருவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வந்தே மாதரம் மசோதாவை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக சாடியுள்ளது.
காங்கிரசும் அதன் ஆதரவு வட்டாரமும் வந்தே மாதரம் பாடலை வெறுக்கின்றன. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையை தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு சட்டத்தில் (Prevention of Insults to National Honour Act) அரசு திருத்தம் கொண்டு வருகிறது. ஆனால், இதை வரவேற்பதற்குப் பதிலாகவும், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாகவும், காங்கிரஸ் இதில் அதிருப்தி கொண்டுள்ளது.
நேருஜி வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே இருந்தபோதே, காங்கிரஸும் அதன் பல தலைவர்களும் வந்தே மாதரம் பாடலை இசைக்க மறுத்துவிட்டனர்.
சித்தராமையாவாக இருக்கட்டும், மத்தியப் பிரதேச காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது சோனியா காந்தியாக இருக்கட்டும். வந்தே மாதரம் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
இப்போதும் கூட அவர்கள் வந்தே மாதரம் பாடலை வெறுக்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவர்களால் ஹித்மாவை (Hidma) புகழ்ந்து பேசவும், நக்ஸல்கள் தியாகிகள் என்று கூறவும் முடிகிறது. அஃப்சல் மற்றும் யாகூப் போன்ற பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கைக் கொண்டிருக்கவும் அவர்களால் முடிகிறது.
அக்காலத்தில், முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்குப் பணிந்து வந்தே மாதரம் பாடலை எதிர்த்தனர். இன்றும் கூட, கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்
ஆனால் பாரத மாதா மற்றும் வந்தே மாதரம் என்று வரும்போது மட்டும் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இது INC (இந்திய தேசிய காங்கிரஸ்) அல்ல, மாறாக ANC (தேச எதிர்ப்புக் காங்கிரஸ்) என்பதைத்தான் காட்டுகிறது.
இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய கீதத்திற்கு முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். ஒருவேளை மாநில பாடல்கள் இருந்தால், அது இசைக்கப்பட்ட பின், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் என இருக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் 6 வரிகளையும் முழுமையாக பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.