"வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்து மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி" - பாஜக கொந்தளிப்பு

ஜார்ஜ் சொரோஸ் உட்பட ராகுல் காந்தியின் வெளிநாட்டு எஜமானர்களால் இந்த நாட்டிற்கு எந்தவொரு தீங்கையும் இழைக்க முடியாது.
"வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்து மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி" - பாஜக கொந்தளிப்பு
Published on

வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி மோடி தலைமையிலான மத்திய அரசை சீர்குலைக்க ராகுல் காந்தி சதி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "மோடி அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்குள் கவிழ்ந்துவிடும்" என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மீண்டும் தனது ஆபத்தான போக்கைக் காட்டியுள்ளார்.

நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டி, அராஜகத்தை உருவாக்குவதன் மூலமே மோடி அரசாங்கத்தை வீழ்த்த அவர் முயற்சிக்கிறார்.

தனது முதலாளிகளான ஜார்ஜ் சொரோஸ் மற்றும் சில வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டளையின்படி இந்தியாவில் உள்ள ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், அவர் ஒரு வெளிநாட்டு செயல்திட்டத்தை இங்குச் செயல்படுத்துகிறார்.

இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். ஆன்மீக விழிப்புணர்வு கொண்டவர்கள். மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த உங்களால் முடியுமா ராகுல் ஜி? சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்

இந்த அரசாங்கம் இந்தியாவின் 140 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. ஜார்ஜ் சொரோஸ் உட்பட ராகுல் காந்தியின் வெளிநாட்டு எஜமானர்களால் இந்த நாட்டிற்கு எந்தவொரு தீங்கையும் இழைக்க முடியாது.

தற்போது உலக அளவில் பல்வேறு போர்கள் மற்றும் மோதல்களால் உலகளாவிய சவால்கள் நீடித்து வந்தபோதிலும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறது.

மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் வரை இந்த அரசாங்கம் தொடர்ந்து நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com