

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற மக்களவை தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு காரணமாக, நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தங்கள் கடின உழைப்பின் பணத்தை நன்கொடையாக வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள், ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
இத்தகைய குற்றச் செயல் நடந்திருக்கும் நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) மவுனம் காப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் உறுதி செய்வது உங்கள் கடமை ஆகும்.
அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்தும்-ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளும் கையாளப்பட்ட விதம் குறித்தும் உடனடியாக சுதந்திரமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடு மாறு உங்களை வலியுறுத்துகிறோம்.
பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விசாரணையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களையும் பொது வெளியில் வெளியிட வேண்டும்.
நீங்கள் எவ்வளவு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் அரசாங்கத்தின் மற்றும் அந்த அறக்கட்டளையின் நம்பகத்தன்மை அடங்கி உள்ளது. இதை இந்திய மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.