லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும்- ஐகோர்ட் உத்தரவு

கோவை ஆஸ்பத்திரியில் உள்ள லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #LotteryMartin
லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும்- ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை:

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் கேஷியர் பழனிச்சாமியிடம் வருமான வரி சோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பழனிச்சாமி கடந்த 3-ந்தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் தனது தந்தை பழனிச்சாமி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட கோரியும், மறு பிரேத பரிசோதனை செய்யக் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் தந்தை பழனிச்சாமி போலீஸ் காவலிலோ, வருமான வரித்துறை அதிகாரிகளின் காவலிலோ இருந்த போது மரணம் அடையவில்லை. அதேநேரம், பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கின் விசாரணை, மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இறந்து போன பழனிச்சாமியின் உடல் தற்போது எங்கு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளதாக அரசு வக்கீல் கூறினார்.

இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி, பாதுகாப்பாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #MadrasHC #LotteryMartin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com