

லண்டன்:
லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது.
இதனிடையே, இந்த தாக்குதலின் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாமஸ் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. தாக்குதல் நடந்த நாளில் அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.
தாக்குதல் நடந்த நேரத்தில் மூன்று பேர் தப்பிப்பதற்காக பயத்தில் பாலத்தில் இருந்து நதியில் குதித்தனர். ஒருவேளை தாமஸும் நதியில் குதித்திருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில், காணமல் போன தாமஸின் சடலம் தேம்ஸ் நதியில் இருந்து போலீசாரால் நேற்று கண்டெடுக்கப்பட்டது. லண்டன் பிரிட்ஜில் இருந்து சுமார் 2.5 மைல் தூரத்தில் லிம் ஹவுஸ் என்ற இடத்திற்கு அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன தாமஸின் உடல் தான் என்பது அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஸ்காட்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.