திமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி

மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். #DMK #IPeriyasamy
திமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி
Published on

பரமக்குடி:

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி முகவர்களிடம் ஆலோசனை செய்வதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் வந்தனர்.

அப்போது அவர்கள் நகரில் சேதுபதி நகர், காட்டுப் பரமக்குடி, சந்தைக்கடை, சுப்பிரமணியசுவாமி தெரு உள்பட பல்வேறு வார்டுகளில் ஆலோசனை வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிகளின் போது ரூ. 616 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

உழவர் சந்தை, பசும்பொன் தேவருக்கு நினைவு மண்டபம், சேது சமுத்திரத் திட்டம் என நல்ல திட்டங்களையும் தி.மு.க. செயல்படுத்தியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அ.திமு.க. அரசால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். தி.மு.க. அமோக வெற்றி பெறும். கடந்த தேர்தல்களைப் போல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தடுக்கப்படும்.

அரசியலில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் மத்தியில் ஆளும் மோடியின் ரிமோட் ஆட்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து, வக்கீல் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன். துரைச்சாமி, ஒன்றிய செயலாளர் போகலூர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #IPeriyasamy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com