தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: திருப்பதி சோதனைச்சாவடிக்கு கூடுதலாக ஸ்கேன் கருவிகள் வாங்க முடிவு

திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 2 ஸ்கேன் கருவிகள் ரூ.35 லட்சம் செலவில் வாங்கப்பட்டு, அலிபிரி டோல்கேட்டில் வைக்கப்பட உள்ளதாக அதிகாரி கூறினார்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: திருப்பதி சோதனைச்சாவடிக்கு கூடுதலாக ஸ்கேன் கருவிகள் வாங்க முடிவு
Published on

திருமலை:

திருமலை திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை உதவி அதிகாரி கங்கராஜு கூறியதாவது:

திருமலை இந்துக்களின் புனித தலமாக கருதப்படுகிறது. திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மற்றும் வியாபாரிகளும் இறைச்சி, மது, குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள், மீன், முட்டை ஆகியவற்றை திருமலையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட பொருட்கள் வாகனங்கள் மூலம் திருமலைக்கு திருட்டுத்தனமாக கொண்டு வரப்படுகிறதா? என அலிபிரி டோல்கேட்டில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. அதையும் மீறி சிலர் தங்களின் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களின் அடிபகுதியிலும், என்ஜின்களிலும் மறைத்து திருமலைக்கு எடுத்து வருகின்றனர். வாகனங்களின் அடிபகுதியில் தடை செய்யப்பட்ட மேற்கண்ட பொருட்களை மறைத்து எடுத்து வருவதை தடுக்க ரூ.60 லட்சம் செலவில் வாகனங்களின் அடிபகுதியை ஸ்கேன் செய்யும் கருவிகள் (அண்டர் வெகிக்கிள் ஸ்கேன் கருவி) புதிதாக வைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே அலிபிரி கருடா சர்க்கிளில் 4 அண்டர் வெகிக்கிள் ஸ்கேன் கருவிகள் இருந்தன. அந்தக் கருவிகள் மழை காலத்தில் நனைந்து பழுதடைந்து விட்டன. தற்போது வைக்கப்பட உள்ள அண்டர் வெகிக்கிள் ஸ்கேன் கருவிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அரசு பஸ்கள் மூலமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பொருட்கள் ஸ்கேன் கருவிகள் மூலம் பரிசோதனைச் செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், வாகனச் சோதனையும் பலப்படுத்தப்படும். திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன.

வாகனங்களை சோதனைச் செய்வதற்காக அலிபிரி டோல்கேட்டில் தற்போது 2 ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, துல்லியமாக கண்காணிக்கும் வகையில் கேமராக்களுடன் கூடிய 2 ஸ்கேன் கருவிகள் ரூ.35 லட்சம் செலவில் வாங்கப்பட்டு கூடுதலாக அலிபிரி டோல்கேட்டில் வைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com