

ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் வி.நகர்-1 பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவரது பக்கத்து வீட்டுக்காரர் தயாநிதி என்கிற ரவி (39). இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார்.
ரவி தன்னை கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்லும்படி முருகேசனிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு முருகேசன் தனது வீட்டில் இருந்தபோது அங்கு ரவி அரிவாள்மனையுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென முருகேசனை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் முருகேசனுக்கு தலை, கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. முருகேசனை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.