

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை “நிபா” வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.
புதுவை மாநிலத்தின் ‘மாகி’ பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது. இதனால் நிபா வைரஸ் மாகியில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாகியில் இருந்து நாள்தோறும் புதுவைக்கு ரெயில் மற்றும் பஸ்களில் மக்கள் வருகின்றனர். இவர்கள் மூலம் புதுவையில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் கூலி வேலை செய்து வந்த நடராஜன் கடும் காய்ச்சலால் சொந்த ஊரான கடலூருக்கு திரும்பி இருந்தார். கேரளாவில் இருந்து திரும்பியதால் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என கருதி ஜிப்மரில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
நடராஜனின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக புனேயில் மத்திய அரசின் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமானது.
அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 14-ந் தேதி நடராஜனின் ரத்த மாதிரி ஆய்வு முடிவுகள் ஜிப்மருக்கு வந்தது.
அதில், அவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் ஜிப்மர் டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நடராஜன் நேற்று மரணம் அடைந்தார்.