

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் கிராமத்தில், 7000 சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5102 சதுர அடி கட்டட பரப்பளவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்த கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 17 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும், 31 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்கியதாகும்.
மேலும், இவ்வலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வாயிலாக 16,209 பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இயக்குநர் முனியநாதன் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டடிடம், கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டடம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், நீலகிரி மாவட்டம் டி.ஓரநல்லி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், கீழநத்தம், கே.என். ஹள்ளி மற்றும் செல்லமுடி, ஆரம்பூண்டி மற்றும் எரையூர் ஆகிய ஐந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.