

சென்னை:
சென்னை பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வேல் அழகி என்ற பெண் வியாபாரி இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை தொடர்ந்து வேல்அழகியின் மகளான புளியந்தோப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி, மருமகள் காந்திமதி, வளர்ப்பு மகள் ஆனந்தவள்ளி மற்றும் முனியம்மாள் ஆகிய 4 பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இவர்களுடன் சரண் என்ற கஞ்சா வியாபாரியும், ஆட்டோ டிரைவர் கோகுல் தாசும் பிடிபட்டனர். 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ. 2½ லட்சம் ரொக்கப் பணம், 2 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய பெண் வியாபாரி வேல்அழகியை போலீசார் தேடி வருகிறார்கள்.