பாகிஸ்தானில் இடைக்கால பிரதமருக்கான போட்டியில் 6 வேட்பாளர்கள்

பாகிஸ்தானில் நாளை நடைபெற உள்ள இடைக்கால பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் ஷாகித் அப்பாஸியை எதிர்த்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தானில் இடைக்கால பிரதமருக்கான போட்டியில் 6 வேட்பாளர்கள்
Published on

இஸ்லாமாபாத்:

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சொத்துகளை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி (என்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து அப்பாசி தனது வேட்பு மனுவை பாராளுமன்ற செயலாளர் ஜவாத் ரபிக் மாலிக்கிடம் அளித்தார்.

பாராளுமன்றக்குழு தலைவரை தேர்வு செய்வதற்காக நாளை மாலை 3 மணிக்கு தேசிய சபையை கூட்டும்படி ஜனாதிபதி மம்னூன் உசைன் உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்தது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று நடத்திய ஆலோசனையில், பிரதமர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எனவே, ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தி உள்ளன. அவர்களின் வேட்பு மனுக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்மூலம் மொத்தம் 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் கருத்தொற்றுமையை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு வேட்பாளரை நிறுத்தினாலும், அப்பாசிக்கு ஆதரவாக மெஜாட்டி வாக்குகள் உள்ளன. தற்போது தனித்தனியாக களமிறங்குவதால் அப்பாசியின் வெற்றி உறுதி ஆகிவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com