தரிசனம் செய்ய போலி டிக்கெட்டுடன் திருப்பதி வந்த 188 மும்பை பக்தர்கள்: பறக்கும் படை அதிகாரி விசாரணை

சாமி தரிசனம் செய்ய போலி டிக்கெட்டுடன் திருப்பதி வந்த 188 மும்பை பக்தர்களிடம் பறக்கும் படை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மும்பையைச் சேர்ந்த 192 பக்தர்கள் நேற்று மாலை திருமலைக்கு வந்தனர்.

அவர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன டிக்கெட் பெற்றுக்கொண்டு வந்தனர். திருமலையில் 300 ரூபாய் கட்டண நுழைவு வாயில் வழியாக, அவர்கள் அனைவரும் தரிசனத்துக்காக சென்றனர்.

அவர்களின் டிக்கெட்டுகளை வாங்கி அதிகாரிகள் பரிசீலனை செய்தபோது, அதில் 4 டிக்கெட்டுகள் மட்டுமே ஒரிஜினல் டிக்கெட் என்றும், மற்ற டிக்கெட்டுகள் போலியானவை என்றும் தெரிய வந்தது. இந்தத் தகவலை தேவஸ்தான அதிகாரிகள் கூறியதும், மும்பை பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் மும்பையில் தனியார் ஏஜென்சியிடம் இந்த டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறினர்.

இதையடுத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா விரைந்து வந்து, மும்பை பக்தர்களிடம் விசாரணை நடத்தி, போலி 300 ரூபாய் டிக்கெட் வைத்திருந்த 188 பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து, விரைவாக தரிசனம் செய்ய இலவச தரிசன கவுண்ட்டர்களில் அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், 300 ரூபாய் டிக்கெட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தான பறக்கும்படை அதிகாரி சதாலட்சுமி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் மும்பையைச் சேர்ந்த தனியார் ஏஜென்சியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com