கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல்

கர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல்
Published on

கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற  உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.

கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com