

‘ஜனநாயகன்’ படம் வருகிற 24-ந்தேதி வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள், போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை ரசிர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ந்தேதி ரிலீசாவதாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக இப்படம் இன்னும் வெளியாகமல் இருக்கிறது.
இதற்கிடையில் முடங்கி கிடந்த இந்தப் படத்துக்கு உயிர் கிடைத்ததுள்ளது. படத்தை மறு தணிக்கை குழு பார்த்துவிட்ட நிலையில், படத்துக்கு சென்சார் விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியத்தில் இருந்து நிறைய வெட்டு போடப்பட்டுள்ளதாம். அதாவது 13 காட்சிகளை நீக்கவேண்டும் என்று தணிக்கை வாரியம் சொன்னதால் அதை படக்குழு சரி செய்துள்ளது.
இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் இதனால் வருகிற 24-ந்தேதி இப்படத்தை வெளியிடும் பணி மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடுவது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. படக்குழு தரப்பில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு எந்தவொரு அறிவிப்பும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்த விஜய், அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். அரசியலில் பணியாற்ற வேண்டியுள்ளதால் தமிழ்சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்து இருந்தார். இதனால் விஜய்யின் நடிப்பில் ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என்று கூறப்பட்டது. இதன்காரணமாகவே ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு மேலோங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.