search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு எதிரொலி: லேப்டாப்- டேப்லெட் விலை உயர வாய்ப்பு
    X

    இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு எதிரொலி: லேப்டாப்- டேப்லெட் விலை உயர வாய்ப்பு

    • இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது.
    • விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

    இப்படி இறக்குமதியாகும் லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களால் பாதுகாப்பு ஆபத்துக்கள் அதிகம் உள்ளதாகவும். இதன் மூலம் தனிநபர் குறித்த தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதி மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி லேப்டாப், டேப்லெட் மற்றும் சிலவகை கணினி உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அரசிடம் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும். இப்படி உரிமம் பெற்றால் மட்டுமே அந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

    இந்த நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு உரிமம் இல்லாமல் லேப்டாப் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைவான அளவிலேயே கம்யூட்டர் சாதன பொருட்கள் இறக்குமதியாகும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கம்ப்யூட்டர் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகி இருப்பதால் இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களின் விற்பனை திடீரென அதிகரித்து உள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் இந்த பொருட்களின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வாரம் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் சுதந்திர தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட கணினி பொருட்கள் விற்பனைக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. இதனால் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் விற்பனை அதிகரித்து வருவதால் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×